
தெமர்லோ, அக்டோபர்-20,பஹாங்கில் கிழக்குக் கரையோர இரயில் பாதைத் திட்டமான ECRL மற்றும் டெலிகோம் மலேசியாவுக்குச் சொந்தமான கேபிள்களைத் திருடி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 4 கும்பல்களைப் போலீஸ் முறியடித்துள்ளது.
Geng Ravi, Geng Kepala, Geng Dany, Geng Mista என அழைக்கப்படும் அந்தக் கும்பல்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் 20 முதல் 60 வயதுக்குட்பட்ட 17 உள்ளூர் ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 12-ஆம் தேதி முதல் தெமர்லோ மற்றும் மெந்தகாப் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் அவர்கள் பிடிபட்டதாகத் தெமர்லோ மாவட்டப் போலீஸ் தலைவர் Mohd Nasyim Bahron தெரிவித்தார்.
செப்டம்பர் முதல் அக்டோபர் வரையில் ECRL கேபிள் சேமிப்புக் கிடங்குகளில் 2 கொள்ளைச் சம்பவங்களும், டெலிகோம் மலேசியா கேபிள்கள் தொடர்பாக 5 திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு 75,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கைகளின் போது லாரி உள்ளிட்ட வாகனங்கள், திருடப்பட்ட கேபிள்கள் மற்றும் கேபிள்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சில சந்தேக நபர்களைப் போலீஸ் தொடர்ந்து தேடி வருகிறது.
கைதான அனைவரிடமும் குற்றவியல் சட்டம் மற்றும் MCMC சட்டங்களின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



