
கூலாய், அக்டோபர்-20,ஜோகூர், கூலாயில் மியன்மார் அகதிகள் வசிக்கும் குடியிருப்புகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில், 13 உள்ளூர் ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 13-ஆம் தேதி கூலாய் பெசாரில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில், 16 முதல் 31 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், அக்டோபர் 14 முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கைதானதாக, ஜோகூர் போலீஸ் தலைவர் அப்துல் ரஹமான் அர்சாட் (Ab Rahaman Arsad) தெரிவித்தார்.
கைதுச் செய்யப்பட்டவர்களில் நால்வருக்கு ஏற்கனவே குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 12 குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 13 கைப்பேசிகள், 3 ஜோடி உடைகள் மற்றும் 3 தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, ரொஹிங்கியா ஆடவர்கள் சிலர் சண்டைக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் போலீஸ் தெரிவித்துள்ளது.
என்றாலும், இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சந்தேக நபர்கள் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களின் பாதுகாப்புக்கும் மாநிலத்தின் நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றச்செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனப் போலீஸ் எச்சரித்துள்ளது.



