Latestமலேசியா

ஆஸ்திரேலியத் திரையரங்கில் முதல் மலேசியத் தமிழ்த் திரைப்படம்; புதிய தடம் பதிக்கும் ‘இரும்புத் தோட்டம்’

மலேசிய மண்ணின் படைப்பாற்றலை அனைத்துலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் பெருமைக்குரிய முயற்சியாக, ஆஸ்திரேலியாவின் பொதுத் திரையரங்கில் வெளியாகிறது ‘இரும்புத் தோட்டம்’. மலேசியத் தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் புதிய வாசலைத் திறக்கும் இந்த வெளியீடு, உள்ளூர் திரைத்துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

ஜெய்தேவ் ஜெயகுமார் இயக்கத்தில், AVLT Production தயாரித்துள்ள இப்படம், ஆஸ்திரேலியாவில் பொதுத் திரையரங்கில் வெளியாகும் முதல் மலேசியத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெறுகிறது.

குற்ற விசாரணையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், வரும் அக்டோபர் 26ஆம் தேதி, மெல்பர்னிலுள்ள Thornbury Picture House திரையரங்கில் இரவு 8.15 மணிக்குத் திரையிடப்படவுள்ளது. Elevate Pro Services நிறுவனம் வாயிலாக இப்படத்தை அங்கு வெளியிடப்படுகிறது.

இதற்கு முன்பு மலேசியத் திரைப்படங்கள், திரைப்பட விழாக்கள் வழியாக ஆஸ்திரேலிய ரசிகர்களைச் சென்றடைந்துள்ளன. அந்தப் பயணத்தின் அடுத்த படியாக, ‘இரும்புத் தோட்டம்’ பொதுத் திரையரங்கில் வெளியாகவிருப்பது, நமது கலைஞர்களின் திறனுக்கும் படைப்புகளுக்கும் புதிய சந்தைகளை நோக்கிப் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்நாட்டில் உருவான தமிழ்த் திரைப்படத்தை மெல்பர்னின் பெரிய திரையில் காணவிருப்பது, அங்குள்ள மலேசியத் தமிழர்களிடையே எதிர்பார்ப்பையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சிறப்புமிக்க வெளியீடு குறித்தும், மலேசியப் படைப்பை ஆஸ்திரேலியத் திரைக்குக் கொண்டு செல்லும் முயற்சி குறித்தும், இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகன் ஜான் பீட்டர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, இப்படத்தை ஆஸ்திரேலியாவில் திரையிடும் வாய்ப்பு எவ்வாறு அமைந்தது என்பதையும், இந்தப் பயணம் தமக்கு அளித்த மகிழ்ச்சியையும் நடிகர் மோகனா ராஜ் பகிர்ந்து கொண்டார்.

மலேசிய மண்ணில் உருவான ஒரு படைப்பு, கடல் கடந்து புதிய ரசிகர்களைச் சென்றடையும் இந்தத் தருணம், நமது கலைக்கும் படைப்பாற்றலுக்கும் கிடைத்துள்ள பெருமை. ‘இரும்புத் தோட்டம்’ பதிக்கும் இந்தப் புதிய தடம், மேலும் பல மலேசியத் தமிழ்ப் படைப்புகள் உலகத் திரைகளை நோக்கிப் பயணிப்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமையும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!