
வாஷிங்டன், நவம்பர்-1, உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களுக்கும் குறைவான காலக் கட்டமே உள்ளது.
இந்நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய ஜோர்ஜியா, வட கரோலீனா போன்ற முக்கிய மாநிலங்களில், குடியரசு கட்சியின் டோனல்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரீசும் வாக்காளர்களைக் கவருவதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் டிரம்ப் நுழையும் பட்சத்தில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை உட்பட அதன் புவிசார் அரசியல் பெரும் மாற்றங்களைச் சந்திக்குமென்பது திண்ணம்.
சீனாவுடன் நிலவும் வர்த்தகப் போரின் தொடர்ச்சியாக, இறக்குமதி பொருட்களுக்கு டிரம்ப் நிச்சயம் கூடுதல் வரி விதிப்பாரென, சீனா சற்று கலங்கி போயிருப்பது உண்மையே.
மீண்டும் அதிபரானால் சீனா, இந்தியா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கு அதிகம் வரி விதிக்கப்போவதாக தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருப்பினும் நவம்பர் 6-ம் தேதி பின்னேரம் அதிபர் தேர்தல் முடிவு வெளிவரும் போது, ஒரு புதிய அத்தியாயத்திற்கு அமெரிக்காவும் உலக நாடுகளும் தயாராக வேண்டி வரலாமென்பது மட்டும் உறுதி.