
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-13-Bandar Sri Damansara அருகே உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாக்கியதில் ஆடவர் ஒருவர் காயமுற்றார்.
யூடியூபரும் கால்பந்து விமர்சகருமான அவருக்குக் கண் குழியில் எலும்பு முறிவும் பிற காயங்களும் ஏற்பட்டன.
சனிக்கிழமை இரவு 7.56 மணிக்கு அச்சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் உதவி கமிஷனர் Shamsudin Mamat தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் தனது வாகனத்தின் டயர்களில் காற்று நிரப்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத பதிவு எண் கொண்ட Yamaha LC மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவரை அணுகியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவ்விருவரும் அவரை மீண்டும் மீண்டும் தாக்கியதோடு, அதனைக் காணொளியாகப் பதிவு செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
அச்சந்தேக நபர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடரப்படுவதாக Shamsudin Mamat கூறினார்.
அத்தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Sri Damansaraவில் உள்ள எண்ணெய் நிலையத்தில் தாம் இரண்டு பேரால் தாக்கப்பட்டதாக அந்த யூடியூபர் X தளத்தில் முன்னதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



