
தெ ஹெக், மே 12 – எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட, ஹன்தாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளித்த நெதர்லாந்து மருத்துவமனையின் பன்னிரண்டு பணியாளர்கள், சிகிச்சை நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோயாளியின் இரத்த மாதிரிகளைச் சேகரிப்பதிலும், அவரது சிறுநீரை அப்புறப்படுத்துவதிலும் நடைமுறை தவறுகள் ஏற்பட்டதாக கிழக்கு நெதர்லாந்திலுள்ள Radbound பல்கலைக்கழக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலை காரணமாக, தொற்று ஏற்படும் அபாயம் குறைவாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 ஊழியர்கள் ஆறு வார கால தடுப்புத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
வியாழக்கிழமை நோயாளி வந்தவுடன் அவரிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட்டபோது முதல் தவறு ஏற்பட்டது. வழக்கமான நடைமுறைகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், இந்த வைரஸின் தன்மை காரணமாக, இரத்தம் இன்னும் கடுமையான நடைமுறைகளின்படி பதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
உண்மையான தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு என்றாலும், இந்த நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவமனை வாரியத்தின் தலைவரான பெர்டின் லஹூயிஸ் (Bertine Lahuis ) கூறினார்.



