
கோலாலம்பூர், ஜூன் 26 – உடல் பருமன் என்பது சுயக்கட்டுப்பாடு இல்லாததன் விளைவு அல்ல மாறாக மருத்துவ கவனிப்பும் சிகிச்சையும் தேவைப்படும் நீண்டகால நோய் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2024 தேசிய சுகாதார மற்றும் நோய்த்தாக்க ஆய்வின்படி, மலேசியர்களில் இருவரில் ஒருவர் உடல் பருமன் அல்லது அதிக உடல் எடை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், ஆசியான் நாடுகளில் அதிக உடல் பருமன் விகிதம் கொண்ட நாடாக மலேசியா உள்ளது.
உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட தொற்றாத நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உடல் பருமன் குறித்து குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவும் மருத்துவ உதவியும் வழங்கப்பட வேண்டும் என்றும், உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை ஊக்குவிக்கவும் “Sayang, Kan?” என்ற நாடளாவிய பிரச்சாரத்தை நோவோ நோர்டிஸ்க் மலேசியா அறிமுகப்படுத்தியுள்ளது.



