
ஜோகூர் பாரு, ஜூன்-26 – 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் கீழ் 5 இந்திய வேட்பாளர்களைக் களம் இறக்குவதன் மூலம் மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP தனது தேர்தல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
நேற்றிரவு திராம் சமூக மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக விழாவில், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் புதிய முகங்களின் கலவையாக, கட்சித் தலைவர் பி. புனிதன் வேட்பாளர்களை அறிவித்தார்.
அதன்படி, புக்கிட் பெர்மாய் சட்டமன்றத் தொகுதியில் ஜவுளி வியாபாரி லீனா மனோ மனோகரனும், பாலோ தொகுதியில் தொழிலதிபர் ஜீவகுமார் தயாளனும், கோத்தா இஸ்கண்டார் தொகுதியில் 27 வயது மனிதவள மேலாளர் அன்னா பிரவீனா சேகரனும் போட்டியிடுகின்றனர்.
மேலும், பெமானிஸ் தொகுதியில் மருத்துவர் Dr அரிவேந்திரன் ஆனந்தனும், பெர்மாஸ் தொகுதியில் வேலா தேபகுமரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
“MIPP ஏதோ ஒப்புக்கு சப்பாக தேர்தலில் போட்டியிடவில்லை; மாறாக, இந்திய சமூகத்திற்கான சிறந்த வாய்ப்புகள், வலுவான கல்வி, குடும்ப வருமான மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கான கூடுதல் ஆதரவை நோக்கமாகக் கொண்டே களம் காண்கிறது” என புனிதன் குறிப்பிட்டார்.
தவிர, வேட்பாளர்கள் வெறும் பிரபலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படாமல், நேர்மை, கல்வித் தகுதி மற்றும் சேவை செய்யும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
ஜூலை 11 ஜோகூர் தேர்தலுக்கான தற்போதைய நிலவரப்படி, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி 5 இந்திய வேட்பாளர்களை நிறுத்தி முன்னிலையில் உள்ளது.
அடுத்த நிலையில் பாரிசான் நேஷனல் சார்பில் ம.இ.கா 4 வேட்பாளர்களையும், பக்காத்தான் ஹராப்பான் 4 இந்திய வேட்பாளர்களையும், MUDA கட்சி ஒரு வேட்பாளரையும் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை காலை அனைத்து 56 தொகுதிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது.



