
ஜோர்ஜ்டவுன், ஜூன்-26 – பினாங்கு, ஜெலுத்தோங்கில் உள்ள Hean Seng Kong சீனக் கோவிலில் கடந்த வாரம் வீச்சரிவாள் தாக்குதல் நடத்தியது மற்றும் சட்டவிரோதமாகக் கூடியது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்த புதுமாப்பிள்ளை உட்பட 4 பேருக்கு, ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது.
34 வயது ஆர். நவீன் ராஜ், 31 வயது எஸ். லோககுமரன், 38 வயது எம். சஞ்சித் குமார் மற்றும் 30 வயது கே. தினேஷ்குமார் ஆகிய நால்வரும் நீதிபதி முன்னிலையில் தங்களின் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த ஜூன் 21-ஆம் தேதி அதிகாலை 4.25 மணியளவில், தலைமறைவாக உள்ள மேலும் நால்வருடன் இணைந்து, அவர்கள் 31 வயது Mohamed Umar Sheriff Mohamed Ameen என்பவரைத் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், சந்தேக நபர்கள் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாலும் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசுத் தரப்பு பலத்த எதிர்ப்பு தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நால்வரையும் தடுத்து வைக்க உத்தரவிட்டது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



