புத்ராஜெயா, செப்டம்பர் -25 – சட்டம் 852 என சுருக்கமாக அழைக்கப்படும் பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024, வரும் அக்டோபர் முதல் தேதி நடைமுறைக்கு வரும்.
சுகாதார அமைச்சு (KKM) அதனை உறுதிப்படுத்தியது.
அப்புதியச் சட்டம் புகையிலைப் பொருட்களின் பதிவு, விற்பனை, பொட்டலமிடல், குறியிடல், மற்றும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை போன்ற விதிமுறைகளை உள்ளடக்கியிருக்கும்.
மின்னியல் சிகரெட்டுகளும் (vape) அதன் கீழ் வருவதாக KKM கூறியது.
இந்த சட்டம் 852 கடந்த பிப்ரவரி மாதமே அரசிதழில் இடம் பெற்று விட்டாலும், இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.
முதலில் ஜூன் மாதம் நடைமுறைக்கு வருமென்றும் பின்னர் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அச்சட்டத்தை அமுல்படுத்தாத வரை, சிறார்களுக்கு vape விற்கப்படுவதை தடை செய்ய முடியாதென, சுகாதார ஆர்வலர்களிடமிருந்து KKM விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
தற்போது ஒருவழியாக அச்சட்டம் நடைமுறைக்கு வருவதால் சுகாதார ஆர்வலர்களும் பெற்றோர்களும் நிம்மதியடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.