
புத்ராஜெயா, ஜனவரி-17,வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கக் கோரி செம்பனை தோட்டத்தொழில் துறையிடமிருந்து வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அவ்வாறு கூறியுள்ளார்.
அந்நியத் தொழிலாளர் தருவிப்பை கடந்தாண்டு முதல் அரசாங்கம் முடக்கி வைத்துள்ளது;
என்றாலும், மோசமான ஆள்பல பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதால் மூலப்பொருள்-தோட்டத் தொழில் அமைச்சு அதில் விலக்களிக்கக் கோருகிறது.
குறிப்பாக சபா, சரவாக் மாநிலங்களில் பயிர்களை அறுவடை செய்யக் கூட ஆளில்லாத அளவுக்கு, தொழிலாளர் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது;
இதற்குத் தீர்வு காணவில்லை என்றால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்திக்க வேண்டி வரும் எனக் கூறி, அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கானி அக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், தேவைப்படும் அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களைத் தருமாறு தோட்டத் தொழில் அமைச்சைக் கேட்டுள்ளோம்.
எல்லாம் கிடைத்ததும் பரிசீலித்து ஒரு முடிவுக்கு வருவோம் என சைஃபுடின் சொன்னார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அரசாங்கம் நிர்ணயித்த உச்சவரம்பை நெருங்கிவிட்டதால், அந்நியத் தொழிலாளர் தருவிப்பு அறிவிக்கப்படாத தேதி வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.