
அனுமதி இல்லாத கோவில்களுக்கு எதிராக பிரதமரின் நிலைப்பாட்டை ஆதரித்தார் சிலாங்கூர் சுல்தான்; மாநிலத்தில் அப்படிபட்ட 687 கோயில்கள்
ஷா ஆலாம், பிப்ரவரி-10,
அனுமதியில்லாமல் கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் வெளியிட்ட உத்தரவை சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா முழுமையாக ஆதரித்துள்ளார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவு, சட்டம், நகரமைப்பு திட்டம் மற்றும் நல்ல நிர்வாகம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்ற சுல்தானின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதாக, இன்று சிலாங்கூர் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்து கோவில்கள், சட்டப்படி அனுமதி பெற்று, திட்டமிட்ட முறையில் கட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரையில், 687 இந்து கோவில்கள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளன.
இதில் 388 அரசாங்க நிலத்திலும், 299 தனியார் நிலத்தில் அமைந்துள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 11.3% இந்து மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இவ்வெண்ணிக்கை மிக அதிகம் என சுல்தான் ஷாராஃபுடின் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், அனுமதியில்லாத கட்டடங்கள் சமய – சமூகங்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, பாதுகாப்பு ஆபத்துகளை உருவாக்கும் என்று அவர் எச்சரித்தார்.
ஊராட்சி மன்றங்களும், கோயில் கட்டும் விண்ணப்பங்களை வெளிப்படையாகவும் நியாயமாகவும் பரிசீலிக்க வேண்டும்; அதோடு, அரசு – தனியார் நிலங்களில் அனுமதியில்லாமல் கோவில்கள் கட்டப்படுவதைக் கட்டுப்படுத்த தொடர் கண்காணிப்பும் அவசியமாகும்.
ஊரார் நிலத்தில் அனுமதியில்லாமல் கோவில்கள் கட்டப்படும் பிரச்னை நீண்டகாலமாக சமூகத்தில் கவலையையும் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும், எனவே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.



