
கோலாலம்பூர், பிப் 20 – போலி அடையாளக் கார்டை கூடுதல் பணம் கொடுத்து வாங்குவதற்கு சட்டவிரோத குடியேறிகள் தயாராய் இருக்கின்றனர்.
ஒரு போலி அடையாளக் கார்டை 5,000 ரிங்கிட்வரை விற்பனை செய்யும் நடவடிக்கையில் போலி அடையாளக் கார்டு விற்கும் கும்பல் ஈடுபட்டு வருவது தேசிய பதிவுத்துறையின் உளவு தகவல் மூலம் தெரியவருவதாக உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ சம்சுல் அனுவார் நஷரா ( Shamsul Anuar Nasarah ) தெரிவித்தார்.
போலி அடையாளக் கார்டுகளை விற்கும் அல்லது அடையாள ஆவணங்களை போலியாக்கும் சேவையை இணையம் வாயிலாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய பதிவுத்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இன்று காலையில் நாடாளுமன்றத்தில் வாய்மொழி கேள்விக்கு பதில் அளித்தபோது சம்சுல் அனுவார் கூறினார்.
முகநூல், instagram, Telegram, மற்றும் Tik Tok போன்ற சமூக வலைத்தளங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவகின்றன.
வேலை தேடுவோர் அல்லது சட்டவிரோதமாக இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகள் போலி அடையாளக் கார்டுகளை பெறுவதில் ஆர்வம் காட்டுவதாக சம்சுல் கூறினார்.