அன்வார் அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பு ரீதியாக மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதிக்கப்படவில்லை; மகாதீர் ஒப்புதல்

ஷா ஆலாம், அக்டோபர்-24,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் மலாய்க்காரர்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பதை, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் நேற்று அன்வாரின் வழக்கறிஞர் ரஸ்லான் ஹத்ரி சுல்கிஃப்லி கேள்விகளால் குடைந்தபோது, தொடக்கத்தில் மகாதீர் தவிர்த்தாலும் பின்னர் அரசியலமைப்பில் மலாய்க்காரர்களின் அதிகாரத்தை குறைக்கும் மாற்றங்கள் எதுவும் இல்லை என ஒப்புக்கொண்டார்.
மேலும், மலாய்க்காரர்கள் இன்னமும் பொதுச் சேவை, போலீஸ் மற்றும் ஆயுதப்படையில் பெரும்பான்மையாக உள்ளனர் என அவர் கூறினார்.
ஆனால் அவை அனைத்தும் “ சட்டத்திற்கு உட்பட்டவை” என அவர் குறிப்பிட்டார்.
அன்வார் மீது மகாதீர் தொடுத்துள்ள RM150 மில்லியன் அவதூறு வழக்கின் இரண்டாவது நாள் விசாரணையின் போது இக்காட்சிகள் அரங்கேறின.
நேற்றைய அமர்வின் முடிவில் மகாதீர் “இந்த வேகத்தில் நான் 200 வயது வரை வாழ்வேன்” என நகைச்சுவையாகக் கூறினார்.
வழக்கு அக்டோபர் 29-ஆம் தேதி மீண்டும் தொடரும்.



