
ஷா அலாம், பிப் 26 – கெடா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் தொடுத்திருந்த அவதூறு வழக்கிற்கு சுமுகமாக தீர்வு காணப்பட்டது.
சுங்கை கிள்ளான் ஆற்றின் துப்புரவுத் திட்டம் தொடர்பாக தான் வெளியிட்ட அவதூறான அறிக்கை தொடர்பான சிவில் வழக்கின் தீர்வு விதிமுறைகளின் ஒரு பகுதியாக, பிரதிவாதியாக முகமட் சனுசி, வாதியான அமிருடினிடம் மன்னிப்புக் கோரினார்.
இரண்டு தரப்பும் இந்த அவதூறு வழக்கிற்கு இணக்கப்பூர்வமான தீர்வு கண்டதை நீதிபதி ரோஷி பைனோன் ( Rozi Bainon ) பதிவு செய்தார்.
எனினும் முகமட் சனுசி தெரிவித்த மன்னிப்பு அம்சத்தின் தகவலை பகிரங்கமாக வெளியிடுவதற்கு நீதிபதி ரோஷி அனுமதிக்கவில்லை.
அவதூறான அறிக்கை தொடர்பாக சனுசிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக கடந்த 2023ஆம்ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி அமிருதின் அறிவித்திருந்தார்.
சுங்கை கிளாங் ஆற்றில் 10 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த விரும்பிய தொழில் அதிபர் டான்ஸ்ரீ வின்சென்ட் டானுக்கும் அமிருனுக்குமிடையே ஊழல் நடந்துள்ளதாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 2ஆம் தேதி முகமட் சனுசி குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக சிலாங்கூர் மந்திரிபுசார் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.