
திபில்ஸி, ஜூலை-13 – அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயது ஷீத்தல் வ்ர்செியன் (Sheetal Wrzesien) என்பவர் அவரது கணவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியாவார்.
ஜூலை 7-ஆம் தேதி இரவு 8 மணியளவில் அத்தம்பதியரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் விரைந்தது.
அங்கு வந்த அதிகாரிகள், பல துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஷீத்தல் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில் அவர்களது 23 வயது மகன் ஜேசனும் காயமடைந்தார்.
சம்பவம் நடந்த இடத்திலேயே ஷீத்தலின் கணவரான 56 வயது கிர்க் பி. வ்ர்செியன் (Kirk B. Wrzesien) கைதுச் செய்யப்பட்டார்.
அவர் தற்போது வயது வந்தோர் தடுப்பு மையத்தில் ஜாமீனில் வெளிவர முடியாதபடி அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலைக் குற்றம், இரண்டு முறை கடுமையான தாக்குதல் மற்றும் குற்றச் செயலின் போது துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பல வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.



