
லண்டன், ஏப்ரல்-17, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் இருப்பதற்கான உறுதியாக அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் அம்முடிவுக்கு வந்துள்ளனர்.
பூமியில் உயிரியல் செயல்முறைகளால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் வாயுக்களின் வேதியியல் கைரேகைகளை, K2-18 b என பெயரிடப்பட்ட ஒரு வேற்று கிரகத்தின் வளிமண்டலத்தில் விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
K2-18 b கிரகமானது, பூமியை விட 8.6 மடங்கு பெரியது; அதோடு 2.6 மடங்கு பெரிய விட்டம் கொண்டதாகும்.
Dimethyl Sulfide (DMS) மற்றும் Dimethyl Disulfide (DMDS) எனப்படும் அவ்விரண்டு வாயுக்களும், பூமியில் வாழும் உயிரினங்களால், குறிப்பாக கடல் வாழ் ஆல்கா (algae) போன்ற நுண்ணுயிர்களால் உருவாக்கப்படுவதாகும்.
இது, இந்த K2-18 b கிரகம் நுண்ணுயிர்களால் நிறைந்திருக்கலாம் என்பதைக் குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அதற்காக, வேற்றுகிரகத்தில் உண்மையான உயிரினங்கள் இருப்பதாக தாங்கள் சொல்ல வரவில்லை என்றும் அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
மாறாக, ஓர் உயிரியல் செயல்முறை நடந்திருக்கலாமென்ற சாத்தியத்தையே அறிவிக்கிறோம்; எனவே, இக்கண்டுபிடிப்பு எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும்; தொடர் கண்காணிப்புகள் தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
என்ற போதிலும் இதனால் உற்சாகமடைந்துள்ளதை அவர்கள் மறுக்கவில்லை.
காரணம், ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் வசிக்கக்கூடிய ஓர் உலகம் இருந்திருக்கலாமென்பதை, கோட்டிட்டு காட்டக் கூடிய முதல் தடயம் இதுவென, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தின் வானியற்பியல் விஞ்ஞானி நிக்கு மதுசுதன் (Nikku Madhusudhan) கூறுகிறார்.
“சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள உயிர்களைத் தேடுவதில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம்; தற்போதைய வசதிகளுடன் வாழக்கூடிய கிரகங்களில் உயிர் கைரேகைளைக் கண்டறிவது சாத்தியம் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்” என பெருமையுடன் மதுசுதன் குறிப்பிட்டார்.
சூரிய மண்டலத்தில் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும் பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாக கூறிய மதுசுதன், செவ்வாய், வெள்ளி மற்றும் பல்வேறு பனிக்கட்டி நிலவுகள் போன்ற இடங்களில் உயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் சூழல்கள் இருப்பதாகக் கூறப்படுவதும் அவற்றிலடங்கும் என்றார்.