
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – அமெரிக்காவுக்கான அடுத்த மலேசியத் தூதராக தாம் பொறுப்பேற்கவிருப்பதாகக் கூறப்படுவதை, முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் மறுத்துள்ளார்.
ஆனால், அப்பொறுப்புக்கு யார் நியமிக்கப்பட்டாலும் தமதமைச்சு முழு ஆதரவை வழங்குமென்றார் அவர்.
அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராக இருந்த முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசிஸின் ஈராண்டு கால பதவிக் காலம் பிப்ரவரி 8-ஆம் தேதியோடு முடிவடைந்தது.
இந்நிலையில், அப்பதவியை நிரப்பப் போவது யாரென்பதை தாம் அடையாளம் கண்டிருப்பதாகவும், இவ்வாரம் பஹ்ரேய்னுக்குச் செல்லும் போது மாமன்னரின் ஒப்புதல் பெறப்படுமென்றும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வெள்ளிக் கிழமைக் கூறியிருந்தார்.
ஆனால், அப்பதவிக்கு சாஃவ்ருலே நியமிக்கப்படலாமென வதந்திகள் எழுந்துள்ளன.
2020-ஆம் ஆண்டு முதல் மேலவை உறுப்பினராக உள்ள சாஃவ்ருலின் செனட்டர் பதவிக் காலம் இவ்வாண்டு இறுதியுடன் முடிவடைவதால், அவரால் மத்திய அமைச்சராகத் தொடர முடியாது.
எனவே, அமெரிக்காவுக்கான தூதராக நியமித்து, அவரின் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள பிரதமர் விரும்பலாம் என்ற அடிப்படையில் அவ்வதந்திகள் உலா வருகின்றன.
மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, செனட்டர் பதவி ஒரு தவணைக்கு மூன்றாண்டுகள் மட்டுமே; ஒருவர் அதிகபட்சமாக 2 தவணைகள் அப்பொறுப்பில் இருக்கலாம்.