
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- அடுக்குமாடி குடியிருப்பொன்றில் புதிதாகப் பிறந்த 2 பூனைக்குட்டிகள் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மடிந்து கிடக்கும் புகைப்படம் வைரலாகி பொது மக்களிடம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், வீட்டொன்றின் முன்புறம் ஒரு கூண்டிலிருந்து 2 பூனைக்குட்டிகளை சிறுவன் வெளியில் எடுக்கும் வீடியோவும் வைரலாகியுள்ளது.
சமூக ஊடகத்தில் அதனைப் பதிவேற்றியவர், அச்சம்பவம் பண்டார் பாரு அம்பாங், ஸ்ரீ நீலாம் அடுக்குமாடியின் D புளோக் கட்டடத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.
அப்போது தான் பிறந்ததாக நம்பப்படும் அவ்விரு பூனைக் குட்டிகளும் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டு நான்காவது மாடியில் மடிந்து கிடந்தன.
எனினும் இச்சம்பவம் எப்போது நடந்தது எனக் குறிப்பிடப்படவில்லை.
ஏற்கனவே அங்கு இது போல் பூனைகள் தூக்கி வீசப்பட்டதும், விஷம் வைக்கப்பட்டதும் நடந்திருப்பதாக அப்பதிவில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், பூனைகள் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜூலையில் 4 புகார்கள் கிடைத்தன; புதியப் புகார்கள் எதுவுமில்லை என அம்பாங் ஜெயா போலீஸ் கூறியது.
அவ்விவகாரம் கூட, உலு லங்காட் கால்நடை சேவைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என அது கூறியது.