
கோலாலாம்பூர், ஜூலை-7 – அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறை ஒட்டுமொத்தமாக மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
அதற்கு சுயேட்சை கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென, CUMIG எனப்படும் மலாயா பல்கலைக்கழக இந்திய பட்டதாரிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் UPU மாணவர் சேர்க்கை முறைக்கும் மலாயாப் பல்கலைக் கழகத்தின் கட்டணத்துடன் கூடிய SATU மாணவர் சேர்க்கை முறைக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் நிலவுவதை அது சுட்டிக் காட்டியது.
இந்த SATU மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் பெயரே அடிபட்டாலும், உண்மையில் ஏராளமான உயர் கல்விக் கூடங்கள் அதே முறையைத் தான் கடைப்பிடிக்கின்றன.
ஆகவே இது ஒரு தேசிய கொள்கையின் மறுஆய்வுக்கான தேவையையும் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.
STPM தேர்வில் 4 CGPA புள்ளிகளைப் பெற்ற மிகச் சிறந்த மாணவர்களுக்கு UPU முறையில் இடம் வழங்காமல், 500,000 ரிங்கிட் கட்டணத்தில் மருத்துவம் போன்ற பட்டப்படிப்புகளுக்கு SATU முறையில் இடம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையானது, மாணவர் சேர்க்கை உண்மையிலேயே தகுதி அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறதா அல்லது வெறும் பண வசதியைப் பொறுத்தே மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
4 CGPA புள்ளிகளைப் பெற்ற எல்லா மாணவர்களுக்கும் இடம் வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால், தகுதி அடிப்படையில் அது நியாமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்படுவது முக்கியமாகும்.
எனவே, சில பரிந்துரைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு CUMIG முன்வைத்துள்ளது.
STPM தேர்வில் 4 CGPA புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் தேர்ந்தேடுத்த துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள நேரடி வாய்ப்பு வழங்குதல், மாணவர் சேர்க்கை மற்றும் அவர்களின் கல்வித் தகுதி குறித்த விவரங்களை பகிரங்கமாக அறிவித்தல், UPU முறையில் குறிப்பாக மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் போன்ற பட்டப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரித்தல் உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.
கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும், அது தனிப்பட்ட சலுகை அல்ல என CUMIG அறிக்கையொன்றில் சுட்டிக் காட்டியது.