
அலோர் ஸ்டார், அக்டோபர் 14 – அலோர் ஸ்டார், மெர்கோங் (Mergong) பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற கோயில் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் மூன்று இளைஞர்கள் காயமடைந்தனர். அவர்களில் 16 வயது இளைஞர் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோத்தா ஸ்டார் மாவட்ட காவல் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ஷேட் பஸ்ரி ஷேட் அலி (Syed Basri Syed Ali) கூறுகையில், மற்ற இரு இளைஞர்களுக்கும் முறையே 20 மற்றும் 40 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சுயநினைவுடன் இருந்தாலும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், ஊர்வலத்தின்போது இளைஞர்கள் ஏந்திச் சென்ற கொடிக்கம்பம், சுமார் 10 மீட்டர் உயரத்தில் இருந்த பிரதான மின்சாரக் கம்பியில் உரசியதால் மூவரும் மின்சாரம் தாக்கி காயமடைந்தது தெரியவந்தது.



