
ஈப்போ, ஆகஸ்ட் 11 – கவியரசர் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் பேராக் ஈப்போவில் கண்ணதாசன் விழா நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சனிக்கிழமை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை தாமான் பெர்த்தாமாவிலுள்ள YRSK மண்டபத்தில் இவ்விழா நடைபெறும்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் சிறந்த இலக்கியப் பேச்சாளர்களான தா. இராமலிங்கம், மரபின் மைந்தன் முத்தையா மற்றும் ‘தமிழ்ச்சுடர்’ தாமல் கோ. சரவணன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றவுள்ளனர்.
மேலும், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த ஐவருக்கு கண்ணதாசன் அறவாரியத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. கண்ணதாசனின் கருத்தாழமிக்க பாடல்களுடன் தொடங்கும் இவ்விழா, தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு சிறந்த இலக்கிய விருந்தாக அமையும்.
“காவியத் தாயின் இளைய மகன்” கவியரசர் கண்ணதாசனை கொண்டாடவும், தமிழைப் போற்றவும், இலக்கியச் சுவையில் நனையவும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் தேநீர் விருந்தும் வழங்கப்படும்.



