
கோலாலம்பூர், அக் 16 –
அக்டோபர் 26 ஆம்தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதிவரை கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு 2025 ஐ முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில்
ஆறு நெடுஞ்சாலைகள் மற்றும் 25 பிரதான சாலைகள் மூடப்படும்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு (ELITE), புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (NKVE), கத்ரி கோரிடர் விரைவுச்சாலை ( Guthrie Corridor Expressway) , வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, MEX நெடுஞ்சாலை மற்றும் KL-சிரம்பான் விரைவுச்சாலை ஆகியவை பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் என்று புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க இயக்குநர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி ( Yusri Hassan Basri ) தெரிவித்தார்.
KLIA விரைவுச்சாலை, புத்ராஜெயா ரிங் ரோட் மற்றும் நகர மையத்தில் உள்ள பல முக்கிய சாலைகளான ஜாலான் இஸ்தானா, ஜாலான் டாமன்சாரா, ஜாலான் துன் அப்துல் ரசாக், ஜாலான் அம்பாங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் பர்லிமென் மற்றும் ஜாலான் கூச்சிங் போன்ற சாலைகளும் பாதிக்கப்பட்ட பாதைகளில் அடங்கும் .
பேராளர்கள் மற்றும் பிரமுகர்களின் சுமுகமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக உச்சநிலை மாநாடு முழுவதும் மொத்தம் 1,111 போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போக்குவரத்து பணியில் அமர்த்தப்படுவர்.
போக்குவரத்து கட்டுப்பாடு, பிரமுகர்களின் (விஐபி) பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகளை அமல்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய போக்குவரத்துப் பணி அக்டோபர் 17 முதல் அக்டோபர் 29 வரை நடைபெறும் என்று யுஸ்ரி ஹசான் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.