
மலாக்கா, ஜூன்-20 – ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மலாக்காவில் ஒரு சிறப்பான கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
”தனித்துவ ஆசிரியரே நாட்டின் உயிர்நாடி” என்ற இவ்வாண்டின் ஆசிரியர் தினக் கருப்பொருளை முன்னிறுத்தி, மலாக்கா மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த பிரார்த்தனை நடைபெற்றது.
பெம்பான், லாடாங் புக்கிட் காஜாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட சுமார் 200 பேர் பங்கேற்றனர்.
கல்வி அமைச்சின் முன்னாள் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கல்விச் சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றி வரும் ஆசிரியர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்த அவர், நாட்டின் தரமான மனித மூலதனத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் முகமை அமைப்பாளர் பாஸ்கரன் சுப்பிரமணியம்,தலைமயாசிரியர் கழகத்தின் தலைவர் கிருஷ்னன், ஆலயத் தலைவர் மணிமாறன் மற்றும் பல்வேறு சமுக அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.



