
செர்டாங், பிப் 7 – பூசாட் பண்டார் பூச்சோங்கில் கடை வீடு ஒன்றின் படிக்கட்டில் இந்திய நிரந்த குடியிருப்புவாசி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இந்திய பிரஜைகளில் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
அந்த அறுவரும் முக்கிய சந்தேகப் பேர்வழியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர்கள் என செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் பாரிட் அகமட் தெரிவித்தார்.
இந்த கொலையின் பிரதம சந்தேகப் பேர்வழியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவரும் இந்திய பிரஜை என தெரிவிக்கப்பட்டது. இதுவரை விசாரணக்கு உதவக்கூடிய புகார்தாரர் ஒருவர் உட்பட நான்கு முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் முகமட் பாரிட் கூறினார்.
கொலையுண்ட நபர் தொழிற்நுட்பாளர் என்பதோடு அவர் இந்நாட்டில் கடந்த 19 ஆண்டு காலமாக நிரந்தரமாக குடியிருந்துவருகிறார் என முகமட் பாரிட் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் விசாரணைக்கு உதவக்கூடிய சிசிடிவி வீடியோ பதிவையும் போலீசார் பரிசோதித்துள்ளனர். பூச்சோங் ஜெயாவில் கடைவீட்டின் படிக்கட்டில் வெளிநாட்டு ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியாகின.



