
பத்து மலை, டிசம்பர்-30 – பத்து மலையின் கம்பீர அடையாளமான 140 அடி முருகன் சிலை, புனரமைப்புக்குப் பிறகு வரும் புத்தாண்டு தினத்தன்று மீண்டும் பக்தகோடிகளுக்குக் காட்சியளிக்கவுள்ளது.
புதுப்பொலிவுடன் சிலை காட்சித் தருவதைக் காண மலேசிய இந்து பெருமக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
முருகன் சிலை நிறுவப்பட்ட 20-ஆம் ஆண்டு விழாவும் ஜனவரி 1-ஆம் தேதி, பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 7 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜை, தொடர்ந்து 8 மணிக்கு பத்துமலை சஷ்டி கவசம் பாராயணம் நடைபெறும் என, தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
பின்னர் காலை 9 மணி முதல், முருகன் சிலையின் அடியில் பன்னீர் அபிஷேகம் நடைபெறும்.
மாலை 4.30 மணிக்கு, பிரபல பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அவர் சொன்னார்.
மிகச் சிறப்பானதொரு நாளாக அமையவிருப்பதால் புத்தாண்டு தினத்திற்கு பெரும் ஆர்வத்துடன் காத்திருப்பதாக, பத்தர்கள் சிலரும் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தனர்.
முருகன் சிலை மீண்டும் திறக்கப்படுவதைக் காண பெரிய அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



