
கோலாலம்பூர், ஜூலை-10 – சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வின் வாகனத்தை பேராக், சிம்பாங் பூலாயில் ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று வைரலான பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புகார் கிடைத்த கையோடு நோட்டீஸ் வெளியிடப்பட்டு அந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, JPJ தலைமை இயக்குநர்
டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
ஓட்டுநரின் அச்செயலைத் தாங்கள் கடுமையாகக் கருதுவதாக அவர் சொன்னார்.
அவ்வாடவர் ஏற்கனவே இது போன்ற தவறுகளைச் செய்துள்ளாரா என்பதும் கண்டறியப்பட்டு வருகிறது.
விசாரணை முடியும் வரை வேறு பணிக்கும் அவர் மாற்றப்பட்டுள்ளார் என ஏடி கூறினார்.
சாலை விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சணியம் பாராமல் JPJ நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
JPJ வாகனமொன்று சாலையின் இரட்டைக் கோட்டில் ஆபத்தான முறையில் இன்னொரு வாகனத்தை முந்திச் செல்லும் 12 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.