
பெக்கான் , ஜன 9 – பெக்கான் , Kampung Temai Hulu வில் தனது மாமாவின் வீட்டின் முற்றத்தில், ஒரு சிறுவனின் காலில் Batek மலைப்பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
பாதிக்கட்ட 10 வயதுடைய அப்துல் ரப்கா அஸ்கா அப்துல்லா, ( Abdul Rafka Azka Abdullah,) என்ற சிறுவன் சுமார் 30 நிமிட போராட்டத்திற்குப் பிறகு அந்த பாம்பிடமிருந்து தப்பியுள்ளான். மாலை மணி 6.30 அளவில் தனது மாமாவின் வீட்டை நோக்கி ஓடும்போது, சுமார் ஆறு மீட்டர் நீளமும் கிட்டத்தட்ட 50 கிலோகிராம் எடையும் கொண்ட மலைப்பாம்பை உதைத்ததால் அவனது காலை அந்த பாம்பு கடித்தது.
சம்பவம் நடந்த நேரத்தில், தனது சகோதரரின் காலை பாம்பு சுற்றிக் கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் இருந்தபோது தனது தம்பி உதவிக்காக அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அவனுக்கு உதவச் சென்றபோது தாமும் பயங்கரமான சூழ்நிலைக்கு உள்ளானதாக 26 வயதுடைய முகமட் நுக்மான் நிஜாம் தெரிவித்தார்.
அந்த நேரத்தில், பாம்பு தனது சகோதரனின் காலில் இருந்து உடல் வரை சுற்றிக் கொண்டதோடு அதன் வாய் அச்சிறுவனின் வலது காலை கவ்விக் கொண்டதால் அதிலிருந்து இரத்தமும் வெளியேறியது.
காலை கவ்வியிருந்த பாம்பின் வாயை திறக்க முயன்றும் அதில் தோல்வி கண்டதால் , அதன் பிறகு உதவிகோரி கூச்சல் போட்டபோது தக்க சமயத்தில் அங்கு வந்த தனது மாமா கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி பாம்பின் வாயை குத்தியதால் தனது தம்பியின் காலை அப்பாம்பு விட்டதாகவும் இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக பெக்கான் மருத்துவமனைக்கு அவனைக் கொண்டுச் சென்றோம் என முகமட் நுக்மான் கூறினார்.



