இத்தாலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; ATP இறுதி சுற்றில் 2 டென்னிஸ் ரசிகர்கள் உயிரிழப்பு

துரீன், இத்தாலி, நவம்பர் 13 – உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் மோதும், தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் (ATP) ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் ATP இறுதிப் போட்டியின் போது இத்தாலி நாட்டின் டூரின் அரங்கில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அங்கு நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது, போட்டியை காண வந்த இரண்டு ரசிகர்கள் திடீரென இருதய நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
70 மற்றும் 80 வயதுடைய அவ்விருவரும் போட்டி தொடங்குவதற்கு முன்பே உயிரிழந்தனர் என்பதால் ATP இறுதிச்சுற்றைத் தொடங்குவதற்கு சற்று தாமதமாகியுள்ளது.
அரங்கில் இருந்த மருத்துவக் குழு உடனடியாக விரைந்து சென்று முதலுதவி அளித்தபோதும், இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.
இத்தாலி டென்னிஸ் கூட்டமைப்பு (FITP) மற்றும் ATP சங்கம் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொண்டது.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ATP இறுதிப் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



