
இந்தியச் சமூகத்தை அவமதித்த சந்தேகத்தில் ‘Cikgu’ Chandra கைது
கோலாலாம்பூர், பிப்ரவரி-12,
ஃபேஸ்புக்கில் இந்தியச் சமூகத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பதிவிட்ட சந்தேகத்தில் Cikgu Chandra எனும் ஆடவர் கைதாகியுள்ளார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவர் கைதானதாகவும், அவரின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கோலாலாம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus தெரிவித்தார்.
அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவும், வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்க்கவுமே அவ்வாறு செய்ததை விசாரணையில் அந்நபர் ஒப்புக் கொண்டார்.
“இந்தியச் சமூகம் நாகரீகமற்றது” என்றும் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட ஆலயங்கள் தொடர்பிலும் Cikgu Chandra அப்பதிவி இட்டிருந்ததாக, பிப்ரவரி 10-ஆம் தேதி செய்யப்பட்ட புகாரை அடுத்து போலீஸ் நடவடிக்கையில் இறங்கியது.
தேச நிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம், தொடர்பு-பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
இவ்வேளையில், 3R எனப்படும் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் குறித்து நிந்தனைப் பதிவுகளை இட்டு பொது அமைதியைக் கெடுக்க வேண்டாம் என்றும், மீறினால் தக்க தண்டனை நிச்சயமென்றும் டத்தோ Fadil எச்சரித்தார்.



