
கோலாலம்பூர், ஏப்ரல்-6- தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமான தெக்குன் நேஷனலுடன் இணைந்து அரசாங்கம், இந்திய தொழில்முனைவோருக்கு இலவச நிர்வாகப் பயிற்சியை வழங்கவுள்ளது.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதனை அறிவித்துள்ளார்.
இத்திட்டம் முதலில் தெக்குனிடமிருந்து நிதியுதவி பெற்ற சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள இந்திய தொழில்முனைவோரை உள்ளடக்கும்.
தொழில்முனைவோருக்கு வணிகம் மற்றும் தணிக்கை நிர்வாகம், சமூக ஊடக உத்திகள், பயனுள்ள நிதி நிர்வாகம் ஆகியவையும் கற்பிக்கப்படும்.
இந்தியச் சமூகத்தின் வணிகங்கள் திறம்பட மற்றும் நிலையான முறையில் நிர்வகிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிச் செய்யும்; அவர்களை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் கடப்பாட்டின் ஒரு பகுதியாக இம்முன்னெடுப்பு அமைந்திருப்பதாக டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார் .
இந்தியச் சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதித் திட்டத்தின் கீழ் தெக்குன் இதுவரை சுமார் 355 இந்திய தொழில்முனைவோருக்கு 8.22 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது.
இவ்வாண்டு இத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 2007-ல் தெக்குன் நேஷனல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த தொகையாகும் என்றார் அவர்.