
கோலாலம்பூர், அக்டோபர்-9,
இந்தியாவுக்குப் பயணம் செய்யும் வெளிநாட்டவர்களின் குடிநுழைவு செயல்முறையை எளிதாக்க புதிய ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி வெளிநாட்டவர்கள் ‘Disembarkation Card’ அட்டையை இணையம் வாயிலாகவோ அல்லது கைப்படிவமாகவோ நிரப்பும் வசதியைப் பெறுவதாக, கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வகையில் இந்தியாவுக்கு வருகை புரியும் வெளிநாட்டவர்கள் தங்கள் வருகைக்கு முன் 72 மணி நேரத்திற்குள் அந்த அட்டையை நிரப்பலாம்.
இதற்கான இணையச் சேவைகள் கீழ்க்கண்ட/ திரையில் காணும் இணையதளங்களில் கிடைக்கும்:
இந்திய குடிநுழைவுத் துறை: https://boi.gov.in
இந்திய விசா இணையதளம்: https://indianvisaonline.gov.in
மேலும், அதிகாரப்பூர்வ “Indian Visa Su-Swagatam” கைப்பேசி செயலி பயன்பாட்டின் மூலமும் இப்படிவத்தை நிரப்பலாம்.
என்ற போதிலும், டிஜிட்டல் நிரப்பும் முறை மக்கள் மத்தியில் முழுமையாக பழக்கப்படும் வரை, அல்லது அதிகபட்சம் 6 மாதங்கள் வரை, கைப்படிவ முறையும் தொடரும் என்று அவ்வறிக்கைக் கூறியது.
இப்புதிய நடைமுறை, குடிநுழைவு மையங்களில் ஏற்படும் தாமதங்களை குறைத்து, இந்தியாவில் நுழையும் வெளிநாட்டு பயணிகளுக்கு மேலும் விரைவான மற்றும் எளிதான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது