
கோலாலம்பூர், மார்ச் 4 – இந்திய மக்கள் தொகையின் உண்மையான எண்ணிக்கை துல்லியமாக பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சிறப்பு மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு பிரதமர் துறையை செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் மக்கள்தொகைத் தரவை உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டுமென அவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தின் உண்மையான மக்கள் தொகை புள்ளி விவரத்தை பிரதிபலிக்கவில்லை என்பதையும் லிங்கேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவின் மதிப்பிடப்பட்ட தற்போதைய மக்கள் தொகையின் 2022ஆம் ஆண்டின் படி , இந்திய சமூகம் 1.98 மில்லியன் அதாவது 6.6 விழுக்காட்டினர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் , தைப்பூசத்தின் போது 2025 இல் மட்டும் பினாங்கில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களும், பத்துமலை தைப்பூசத்தில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களும் வந்ததால் இந்திய சமூகத்தின் மக்கள் தொகை உண்மையில் அதிகமாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது என மேலவையில் உரையாற்றியபோது லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
MyCensus 2020, மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்திய சமூகத்தில் 50 விழுக்காட்டினர் மட்டுமே கலந்து கொண்டதாக 2021ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி The Star பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இது தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது—அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்ட இறுதித் தரவு உண்மையில் சரியானதா? இல்லையெனில், இந்திய சமூகம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு கணிசமாகக் குறைவான ஒதுக்கீடுகளைப் பெறலாம்.
தேசியக் கொள்கைகள் மற்றும் விதிகள் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் யதார்த்தத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாகச் செயல்பட வேண்டும்.
அமைப்பு முறையின் பலவீனங்கள் மற்றும் புதுப்பிக்கப்படாத தரவுகள் காரணமாக இந்திய சமூகத்தை தொடர்ந்து ஒதுக்கி வைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.