
கோலாலம்பூர், மார்ச்-5 – ஆஸ்ட்ரோவுக்குச் சொந்தமான மலாய் வானொலியைச் சேர்ந்த அறிவிப்பாளர்கள் மற்ற மதத்தாரின் சடங்குகளை கேலி செய்த வீடியோ தொடர்பில், போலீஸார் விசாரணை அறிக்கைத் திறந்துள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் 6 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதால், விசாரணை நடைபெறுவதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் கூறினார்.
மதங்களை உட்படுத்தி, நல்லிணக்கத்தைக் கெடுத்தது, பிரிவினையை ஏற்படுத்தியது, தீய நோக்கோடு வெறுப்புணர்வைத் தூண்டியது போன்றவற்றுக்காக, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறும்.
தவிர, 1998-ஆம் ஆண்டு தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெறுகிறது.
இந்துக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள அந்த வீடியோவை வானொலி நிர்வாகம் அதன் சமூக ஊடகங்களிலிருந்து நீக்கியிருப்பதையும் IGP உறுதிப்படுத்தினார்.
ஆனால் அழிக்கப்படுவதற்கு முன்பாக, அவ்வீடியோ 95,400 தடவைப் பார்க்கப்பட்டுள்ளதோடு, 204 பயனர்களால் பகிரப்பட்டும் உள்ளது.
சம்பந்தப்பட்ட 3 அறிவிப்பாளர்கள் மன்னிப்புக் கேட்டுள்ள நிலையில், நிர்வாகத்தால் அவர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆக வேண்டுமென பரவலாகக் கோரிக்கை எழுந்துள்ளது.