
அட்லாண்டா, ஏப்ரல்-13, அமெரிக்காவிலேயே முதன் முறையாக, அதன் தென்கிழக்கு மாநிலமான ஜோர்ஜியாவில் இந்து வெறுப்பு மற்றும் இந்து மதவெறிக்கு எதிரான சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மசோதா சட்டமாக இயற்றப்பட்டால், ஜோர்ஜியாவின் தண்டனைச் சட்டத்தில் இந்து வெறுப்பை வரையறுக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும்.
இதன் மூலம், அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு வழி பிறக்கும்.
மசோதா 375 என்றழைக்கப்படும் அந்த சட்ட பரிந்துரையில், “இந்து வெறுப்பு” என்பது “இந்து மதத்திற்கு எதிரான விரோதமான, அழிவை ஏற்படுத்தக் கூடிய மற்றும் இழிவான அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகள்” என வரையறுக்கப்படுகிறது.
இதையடுத்து, நடப்பில் பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களைச் செயல்படுத்தி வரும் உள்ளூர் அமலாக்க நிறுவனங்கள், இனி இந்து வெறுப்பையும் அதில் சேர்த்துக் கொள்வது கட்டாயமாகும்.
இம்மசோதா குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த CoHNA எனப்படும் வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணி, அது சட்டமான நிறைவேற்றப்பட்டால் மீண்டும் ஒரு வரலாறு உருவாகும் என வருணித்தது.
இந்த அதிமுக்கியமான மசோதாவில், இந்து சமூகத்தின் தேவைகளை ஆதரித்த குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் முக்கிய செனட்டர்களுக்கும் அக்கூட்டணி நன்றித் தெரிவித்துக் கொண்டது.
இந்த மசோதா அறிமுகமாவதற்கு அடித்தளமாக விளங்கியதே, இந்து வெறுப்பு மற்றும் இந்து மதவெறியைக் கண்டித்து 2023 ஏப்ரலில் ஜோர்ஜியாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமே.
அத்தீர்மானம், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான பின்பற்றுபவர்களைக் கொண்ட, உலகின் பழமையான மதங்களில் ஒன்றாக இந்து மதத்தை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
2023-2024 மத கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் சுமார் 2.5 மில்லியன் இந்துக்கள் உள்ளனர்- இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 0.9 விழுக்காடாகும்.
அவர்களில் 40,000 க்கும் மேற்பட்டோர் ஜோர்ஜியாவில், குறிப்பாக தலைப்பட்டணமான அட்லாண்டாவில் வசிக்கின்றனர்.