
ஜாகார்த்தா, அக்டோபர்-26, இந்தோனீசியாவில் Apple நிறுவனத்தின் iPhone 16 கைப்பேசிகளைப் பயன்படுத்தவோ அல்லது விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளத.
தடையை மீறி இயக்கப்படும் கருவிகள் சட்டவிரோதமாக கருதப்படுமென, அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அப்படி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் iPhone 16 குறித்து மக்கள் புகாரளிக்கலாம் என்றார் அவர்.
iPhone 16 கைப்பேசிகளுக்கு IMEI எனப்படும் அனைத்துலகக் கைப்பேசி அடையாள எண் அங்கீகாரம் இந்தோனீசியாவில் வழங்கப்படவில்லை என அவர் சொன்னார்.
இந்தோனீசியாவில் முதலீடு செய்யும் தனது வாக்குறுதியை Apple இன்னும் நிறைவேற்றாமலிருப்பதே அந்நாட்டரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாகும்.
ஒப்புக் கொண்ட தொகையில் இதுவரை 95 மில்லியன் டாலரை Apple நிறுவனம் இந்தோனீசியாவில் முதலீடு செய்துள்ளது.
இன்னும் 14.75 மில்லியன் டாலர் முதலீடு நிலுவையில் இருக்கும் நிலையில், அந்தக் கடப்பாட்டை நிறைவேற்ற Apple ஆர்வம் காட்டவில்லை என்பதே இந்தோனீசிய அரசின் குற்றச்சாட்டாகும்.
இத்தடையால் Apple அடிபணியுமா அல்லது இந்தோனீசிய அரசாங்கம் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்குச் செல்லுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.