
டென்பசார், ஜூலை 3 – இந்தோனேசியாவின் பிரபல உல்லாச தீவான பாலியில் பெர்ரி மூழ்கிய சம்பவத்தில் குறைந்தது 61பேர் காணவில்லையென உள்ளூர் தேடும் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்தது. புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி இரவு மணி 11.20 அளவில் பாலி நீரிணையில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்தோனேசியாவின் முக்கிய ஜாவா தீவிலிருந்து பிரபலமான விடுமுறை தளமான பாலிக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த பெர்ரி மூழ்கியதாக சுரபாயாவைச் சேர்ந்த தேடும் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்தது. அந்த பெர்ரியில் 53 பயணிகளும் 12 ஊழியர்களும் இருந்தனர். மீட்பு நடவடிக்கைக்கான முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
14 டிரக்குகள் உட்பட 22 வாகனங்களை அந்த பெர்ரி ஏற்றியிருந்த நிலையில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது மூழ்கியதில் இன்று அதிகாலையில் நால்வர் மீட்கப்பட்டனர் . தென் கிழக்காசியாவில் சுமார் 17,000 தீவுக் கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியாவில் மோசமான பாதுகாப்பு தரத்தினால் கடல் பயண சேவையில் ஈடுபட்டுவரும் பெர்ரி மற்றும் படகுகள் தொடர்பான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
கடந்த மார்ச் மாதம் பாலி கடல் பகுதியில் கடும் அலையினால் 16 பேருடன் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் மரணம் அடைந்ததோடு மேலும் ஒருவர் காயம் அடைந்தார். 2018ஆம் ஆண்டில் சுமத்திரா தீவிலுள்ள உலகின் ஆழமான ஏரியில் பெர்ரி கவிழ்ந்த சம்பவத்தில் 150 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்.