
கோலாலம்பூர், மார்ச்-6 – இந்த நாடு மலாய்க்காரர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மட்டும் சொந்தமல்ல.
மாறாக, பல்லின மற்றும் பல்வேறு மதங்களைப் பிரதிநிதிக்கும் பூமி என, அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசிஸ் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் சபா-சரவாக் மக்களை நாம் பாராட்டியாக வேண்டும்;
அவர்கள் மலேசிய அடையாளத்தின் வலுவான உணர்வைக் கொண்டுள்ளதாக நஸ்ரி சொன்னார்.
சபா – சரவாக் மக்கள், தத்தம் மாநிலங்களை மலேசியர்களாகவே நடத்துகிறார்கள்; தங்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் மலேசியர்களாகவே ஒன்றாக வாழ்கிறார்கள்.
ஆனால், இதற்கு நேர்மாறாக, தீபகற்பத்தில் உள்ள பல மலாய்க்காரர்கள் தேசியத்தை விட இனத்தை முன்னுரிமைப்படுத்த முனைகின்றனர்.
அரசியல் ஆதாயம் என வசதிப்படும் போது மட்டுமே அவர்கள் தங்களை மலேசியர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்; தேர்தல்களில் மலாய்க்காரர் அல்லாத வாக்குகளைப் பெறும் போது இதனை அப்பட்டமாகக் காணலாம்; இவர்கள் உண்மையில் “போலி மலேசியர்கள்” என நஸ்ரி சாடினார்.
“அனைத்துலக அரங்கில் மலேசியாவின் முகவரியாகத் திகழ்ந்த தேசிய விளையாட்டு ஜாம்பவான்கள் டத்தோ நிக்கோல் டேவிட் மற்றும் டத்தோ லீ சோங் வெய் ஆகியோர் தங்களை இந்தியர்களாகவோ சீனர்களாகவோ அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை; மாறாக மலேசியாவுக்கே விளையாடினர்,” என நஸ்ரி கூறினார்.
நாட்டின் அரசியல் திசை மற்றும் அரசியலில் இஸ்லாத்தின் தாக்கம் வளர்ந்து வருவது குறித்து FMT கேட்ட போது அந்த அம்னோ மூத்தத் தலைவர் அவாறு சொன்னார்.