
சுங்கை பூலோ, மார்ச் 10–நாட்டில் இன மற்றும் மத ரீதியிலான தூண்டுதல்களை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பான விவகாரம் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
“நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நான் இந்த விவகாரத்தைக் கொண்டு செல்வேன். இது குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
சமூகப் பாதுகாப்பு அமைப்பு (PERKESO), முன்னாள் ராணுவத்தினர் விவகாரக் கழகம் (PERHEBAT) மற்றும் ராணுவ வீரர் விவகாரத் துறை (JHEV) ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலித் நோர்டினும் கலந்து கொண்டார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், சில தரப்பினரால் திட்டமிட்டுத் தூண்டப்படும் இனவாதப் போக்குகள் குறித்துத் தனது கவலையைத் தெரிவித்தார்.
இத்தகையச் செயல்களில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறை ஏற்கனவே கைது செய்துள்ளதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“நேற்று சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவல்துறை விசாரணை நடத்துவதற்கும், தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நாம் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்.
“அந்த நபர்கள் யார் என்பது மலேசிய மக்கள் அனைவருக்கும் ஏற்கனவே தெரியும். அவர்களைப் பற்றி நான் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மேலும் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை,” என்று அவர் மேலும் சொன்னார்.



