
செர்டாங் – ஆகஸ்ட்-30 – இனரீதியாக இந்நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இனங்களுக்கு இடையில் வெறுப்புணர்வை தூண்டி விட்டு வேடிக்கைப் பாக்கும் எந்த நாடும் முன்னேறாது என்றார் அவர். ஊர், மாவட்ட உணர்வுகளை விட பல்லின மக்கள் வாழும் மலேசியா என்ற உணர்வே முக்கியமாகும்.
எந்த நல்ல விஷயத்தை கொண்டு வந்தாலும் அதையும் இனவிவகாரமாக்கி, வெறுப்புணர்வைத் தூண்டி விடுவது சிலருக்கு வழக்கமாகி விட்டது என, சர்ச்சைக்குள்ளாகியுள்ள நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவுக்கு எழுந்துள்ள ஆட்சேபங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.
ஒருவரும் அவரின் இனத்தையோ மொழியையோ கலாச்சாரத்தின் பெருமைகளையோ விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால், அதற்காக இன்னோர் இனத்தை இழிவுப்படுத்தக் கூடாது என அன்வார் நினைவுறுத்தினார். ஒற்றுமை என்பது மலாய்க்காரர்களை மட்டுமே உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் zero sum game விளையாட்டல்ல என்றார் அவர்.
2025 தேசிய தினத்தை ஒட்டிய பிரதமரின் பிரதான உரையில் அன்வார் அவ்வாறு பேசினார்.