Latest

இரகசிய ஆவணங்கள் தொடர்பில் இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது

வியன்னா, அக்டோபர்-16,

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான வெளியுறவுக் கொள்கை நிபுணர் ஏஷ்லி ஜே. தெல்லிஸ் (Ashley J. Tellis) இரகசிய தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில், அமெரிக்காவில் கைதாகியுள்ளார்.

தெல்லிஸ் கொள்கை வட்டாரங்களில் பரவலாக அறியப்படுகிறார் – அவர் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபள்யூ புஷ்ஷின் (George W. Bush) கீழ் தேசிய பாதுகாப்பு மன்றத்தில் பணியாற்றியதோடு அமெரிக்க வெளியுறவுத்துறையில் மூத்த ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் வெர்ஜினியா மாநிலத்தின் வியன்னாவில் உள்ள அவரது வீட்டில் ‘இரகசியம்’ அல்லது ‘பரம இரகசியம்’ என்று குறிக்கப்பட்ட 1,000 பக்கங்களுக்கு மேற்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அண்மைய சில மாதங்களில் தெல்லிஸ் அமெரிக்க அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் துறை கட்டடங்களுக்குள் நுழைந்து இராணுவ விமானத் திறன்கள் பற்றிய தகவல்கள் உட்பட இரகசிய ஆவணங்களை அச்சிட்டு, பின்னர் அவற்றை பெட்டிகள் அல்லது பைகளில் எடுத்துச் சென்றதாக நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் பல ஆண்டுகளாக சீன அரசாங்க அதிகாரிகளுடன் தெல்லிஸ் பல சந்திப்புகளை நடத்தியதும் அம்பலமாகியுள்ளது.

ஆக, தேசிய பாதுகாப்பு இரகசியங்களை அவர் வெளிநாட்டுக்கு விற்றாரா என்ற கோணத்திலும் விசாரணை சூடுபிடித்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 250,000 டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!