
கோலாலம்பூர், ஜூலை 22 – நாட்டின் எல்லைகளில் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் சியோனிஸ் ஆட்சியின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு நீதி கிடைக்க மலேசியா மிகவும் உறுதியாகவும் வெளிப்படையாகவும் குரல் கொடுத்திருப்பதால், நமது நாடு குறிவைக்கப்படலாம் என்பதை அவர் தெரிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக தாய்லாந்திலிருந்து ஆயுதங்களைக் கடத்தி மொசாட் முகவர்களுடன் சதி செய்த சிலாங்கூரைச் சேர்ந்த மலாய் தம்பதியினர் பின்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அமைச்சு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே வேளை மொசாட் முகவர்கள் இந்த நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றது என்று அன்வர் உறுதியளித்துள்ளார்.