வாஷிங்டன், நவம்பர்-27, அமெரிக்காவும் பிரான்சும் இணைந்து மேற்கொண்ட அமைதி முயற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, இஸ்ரேலும் ஈரான் ஆதரவிலான ஹிஸ்புல்லா இராணுவத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டிருப்பதை அடுத்து, அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை அது நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
இதன் வழி, கடந்தாண்டு காசா முனையில் வெடித்த போரை தொடர்ந்து, இஸ்ரேல்- லெபனான் எல்லையில் இதுவரை ஆயிரம் பேர் உயிரிழக்கக் காரணமான நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விரோதப் போக்கை நிரந்தரமாக நிறுத்தும் வகையில் இந்த போர் நிறுத்த உடன்படிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பைடன் குறிப்பிட்டார்.
ஒன்று மட்டும் தெளிவு, ஹிஸ்புல்லாவும் இதர பயங்கரவாத அமைப்புகளும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தலைப் ஏற்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என பைடன் சுட்டிக் காட்டினார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து முன்னதாக சில ஐயப்பாடுகளைக் கிளப்பியிருந்த இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை, நேற்று ஒருவழியாக 10-1 என்ற வாக்குகளில் அதனை அங்கீகரித்தது.
இஸ்ரேல் படிப்படியாக 60 நாட்களில் தனது படைகளைத் திரும்பப் பெறும்.
அதே சமயம், தனது எல்லையருகே ஹிஸ்புல்லா இராணுவம் மீண்டும் கட்டமைப்புகளை எழுப்பாதிருப்பதை இஸ்ரேல் உறுதிச் செய்யும்.
இரு பக்கத்தையும் சேர்ந்த பொது மக்கள் விரைவிலேயே பாதுகாப்பாக தத்தம் சமூகங்களுக்குத் திரும்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.