
கென்டக்கி, மார்ச்-12-அமெரிக்கா ஏற்கனவே ஈரான் போரில் வெற்றிப் பெற்று விட்டதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால், “வேலை முடியும் வரை” அமெரிக்கப் படைகள் அங்கு தொடரும் என அவர் சொன்னார்.
கென்டக்கி மாநில கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “போரின் முதல் மணி நேரத்திலேயே எங்களின் வெற்றி உறுதிச் செய்யப்பட்டு விட்டது” என்றார்.
இனியும் ஈரானில் தாக்கி அழிக்க இலக்கேதும் இல்லை எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், விரைவிலேயே போர் முடிவுக்கு வரலாமென்றார்.
நிலைமை இவ்வாறிருக்க, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பொருளாதார மையங்களை தாக்குவதாக ஈரான் எச்சரித்து, Hormuz நீரிணையை முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது.
அதே சமயம் போர் முடியுமா இல்லையா என்பதை தாங்களே முடிவுச் செய்வோம் எனவும் தெஹ்ரான் கூறியது.
இதனிடையே ஐ.நா. பாதுகாப்பு மன்றம் வளைகுடா நாடுகள் மீதான ஈரானியத் தாக்குதல்களை கண்டித்துள்ளது.
மற்றொரு நிலவரத்தில், ஈரானின் புதிய உச்சத் தலைவரான ஆயதொலா மொஜ்தபா கமேனி, போரில் சிறிய காயமடைந்துள்ளார்.
எனினும் நடமாடும் நிலையிலேயே அவர் இருப்பதாக அரசாங்கத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
தனது தந்தை ஆயதொலா அலி கமேனி இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து, மொஜ்தபா பொதுவெளியில் வரவும் இல்லை, அறிக்கை எதனையும் வெளியிடவும் இல்லை.
அப்போதே அவரின் உடல்நலம் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், அவர் போர்க்காயம் அடைந்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.



