
ஜோகூர் பாரு, டிசம்பர்-22 – ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயாவில் ஓர் உணவுக் கடையில் ஒரு கும்பலுக்கும் இரு ஆடவர்களுக்கும் இடையே மூண்ட சண்டை குறித்து, போலீஸ் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தற்போதைக்கு, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே புகாரளித்திருப்பதாக, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் கூறினார்.
பாதிக்கப்பட்ட இன்னொருவரோ அல்லது உணவுக் கடை உரிமையாளரோ இன்னும் புகாரளிக்கவில்லை என்றார் அவர்.
முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலான 29 வினாடி வீடியோவில், பாதிக்கப்பட்ட இருவர் உட்பட சில பொது மக்கள் அந்த உணவுக் கடையில் அமர்ந்திருப்பதும், கருப்பு உடையணிந்த நால்வர் அங்கு நடமாடுவதும் தெரிந்தது.
பின்னர், இருவர் இருக்கும் மேசையை நெருங்கிய அக்கும்பல் முதலில் அவர்களிடம் ஏதோ பேசி, பின்னர் அவர்களைத் தாக்கினர்.
நிலைமையை மோசமாக்கும் வகையில் திடீரென கடையின் நாலாப்புறமும் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஆடவர்கள் தோன்றி சம்பந்தப்பட்ட இரு ஆடவர்களையும் சரமாரியாகத் தாக்கினர்.
எனினும் அத்தாக்குதல் வெறும் 35 வினாடி மட்டுமே நீடித்தது; பிறகு அக்கும்பல் அங்கிருந்து கிளம்புவதும், பொது மக்கள் பாதிக்கப்பட்ட இரு ஆடவர்களுக்கு உதவுவதும் தெரிந்தது.



