உலகக் கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷாமளாராணிக்கு RM10,000 சன்மானம்

செப்பாங், டிசம்பர்-3,
கடந்த ஞாயிறன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலகக் கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேசிய வீராங்கனை C. ஷாமளாராணிக்கு, RM10,000 சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் மலேசியப் பெண்ணாக அவர் பெயர் பதித்தார்.
அதனை அங்கீகரிக்கும் வகையில் MAKAF எனப்படும் மலேசியக் கராத்தே சம்மேளனம் நேற்று அந்த வெகுமதியை வழங்கி சிறப்பித்தது.
திரைக்குப் பின்னால் தான் போடும் உழைப்புப் பலருக்குத் தெரியாது…இந்நிலையில் அடுத்த வார தாய்லாந்து சீ போட்டிக்குத் தயாராகி வரும் இந்தச் சமயத்தில அங்கீகாரம் கிடைத்துள்ளது பெரிய ஊக்குவிப்பாகும் என ஷாமளாராணி வருணித்தார்.
உலகப் போட்டியில் பதக்கத்திற்கு குறி வைக்காமல், அனுபவம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த தமக்கு இறுதிச் சுற்று வரை முன்னேறியது ஒரு போனஸ் என்றார் அவர்.
50 கிலோ கிராமுக்குக் கீழ்பட்ட எடைப் பிரிவில் 2021, 2023 சீ போட்டிகளில் தங்கம் வென்ற ஷாமளாராணி, தாய்லாந்தில் hattrick சாதனையைப் படைக்க இலக்கு வைத்துள்ளார்.
இவ்வேளையில் நேற்றைய MAKAF நிகழ்வில், தேசியக் கராத்தே தலைமைப் பயிற்சியாளர் R. ஷர்மேந்திரனுக்கு RM 2,000 வெகுமதி வழங்கப்பட்டது.



