ஜெனிவா, நவம்பர்-30, பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் தொடர்கதையாகி வரும் நிலையில், உலகில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு 1 பெண் கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை ஒரு ‘தொற்றுநோய்’ என வருணித்த ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தெரெஸ், (Antonio Guterres) இது மனிதகுலத்திற்கே ஒரு வெட்கக்கேடு என கடுமையாகச் சாடினார்.
இது தொடர நாம் அனுமதிக்கக் கூடாது;
நீதியை நிலைநாட்டவும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் அவசர நடவடிக்கைகள் தேவை என்றார் அவர்.
அதே சமயம் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆலோசகச் சேவையும் உளரீதியான ஆதரவும் கிடைப்பதை உறுதிச் செய்வதும் முக்கியமென அவர் சொன்னார்.
நவம்பர் 25-ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை ஒட்டி அவர் பேசினார்.
பெண் கொலைகள், எல்லைகள், சமூகப்- பொருளாதார அந்தஸ்து, கலாச்சாரங்களைத் தாண்டியவை.
2023-ல் மட்டும் 21,700 பெண்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் சொந்த குடும்ப உறுப்பினர்களாலேயோ அல்லது நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களாலேயோ கொல்லப்பட்டுள்ளனர்.
அச்சம்பவங்களில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஓசியானியா கண்டங்கள் முன்னணி வகிக்கின்றன.
ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களைக் காட்டிலும், சொந்த குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட பெண்களே அதிகமாகும்.
2023-ல் வெறும் 37 நாடுகளில் மட்டுமே பெண் கொலைகள் பதிவாகியுள்ளன.
மற்ற நாடுகளில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை அல்லது தரவுகள் திரட்டப்படுவதில்லை.
ஆக உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிகைக் பல மடங்காக இருக்கலாமென ஐயுறப்படுகிறது.