உலக சதுரங்கப் போட்டியில் சீன வீரர் ஆட்டத்தை விற்றாரா? சர்சையைக் கிளப்பும் ரஷ்ய அதிகாரி
மோஸ்கோ, டிசம்பர்-14, சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் டி. குகேஷிடம் சீனப் போட்டியாளர் டிங் லிரென் (Ding Liren) வேண்டுமென்றே தோற்றதாக சர்ச்சை வெடித்துள்ளது.
ரஷ்ய சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலாடோவ் (Andrei Filatov) அக்குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
14 சுற்றுகள் கொண்ட அப்போட்டி கடுமையாகப் போய்க் கொண்டிருந்த போது, காய் நகர்த்தலில் டிங் லிரென் செய்த தவறு சந்தேகத்தைக் கிளப்புகிறது;
அது, அனுபவம் வாய்ந்த அதுவும் ஒரு நடப்பு வெற்றியாளர் செய்யக் கூடியத் தவறல்ல; புதிதாக சதுரங்கம் விளையாடுபவர்கள் செய்யும் தவறு போல் உள்ளது.
எனவே, இது குறித்து அனைத்துலக சதுரங்க விளையாட்டு சம்மேளனமான FIDE விசாரணை நடத்த வேண்டுமென ஃபிலாடோவ் வலியுறுத்தியுள்ளார்.
சதுரங்கப் போட்டியில் ரஷ்யா முன்னணி நாடாக இருப்பதால், அக்குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான 18 வயது குகேஷ், அப்போட்டியில் வாகை சூடி மிக இளம் வயதில் உலக வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்த குகேஷுக்கு பரிசு தொகையாக 1.35 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது.