
பேராக், அக்டோபர் 23 – பேராக், கெரிக் பகுதியில் கிழக்கு–மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2.40 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் பிரபல சமயப் போதகர் உஸ்தாட் வாடி அன்வார் காயமடைந்தார்.
இந்த விபத்தில் டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire), பெரோடுவா மைவி (Perodua Myvi), பெரோடுவா பெஸ்ஸா (Perodua Bezza) ஆகிய மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்டன.
விபத்தில் மொத்தம் ஐந்து பேர் காயமடைந்தனர். மைவி காரில் பயணித்த மூவரும், வெல்ஃபயர் காரில் பயணித்த இருவரும் காயமடைந்தனர். அவர்களில் மைவி காரின் 24 வயது ஓட்டுநர் படுகாயமடைந்தார். மேலும், 25 வயது பயணி ஒருவர் காருக்குள் சிக்கிக்கொண்டார். பெஸ்ஸா காரில் பயணித்த மூவருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திலிருந்து 59 கிலோமீட்டர் பயணம் செய்து அதிகாலை 3.42 மணிக்கு அங்கு சென்றடைந்தனர். காயமடைந்த ஐந்து பேரும் சிகிச்சைக்காக கெரிக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
10 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூன்று மீட்பு வாகனங்கள் பங்கேற்ற மீட்புப் பணி அதிகாலை 4.39 மணிக்கு நிறைவடைந்தது.



