
கோலாலம்பூர், ஏப் 10 – சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் ஏப்ரல் 1ஆம் தேதி எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 190 வீடுகளில் முக்கிய தரப்பினரின் ஆய்வுகளில் பாதுகாப்பானவை என்று கண்டறியப்பட்ட பின்னர் அவ்வீடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் குடியேறினர் .
நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்ட 487 வீடுகளை தெனாகா நேசனல் பெர்ஹாட், ஆயர் சிலாங்கூர் பெர்ஹாட், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, சுபாங் ஜெயா நகரான்மை கழகம் மற்றும் அந்தந்த நிறுவனங்கள் உள்ளிட்ட 12 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆய்வு செய்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஓமார் கான் ( Hussein Omar Khan ) தெரிவித்தார்.
இவற்றில் 328 வீடுகளில் குடியிருப்பதில் பாதுகாப்பு பிரச்னை எதுவும் இல்லையென்றும் அவற்றில் 190 வீடுகளில் மக்கள் குடியிருப்பதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட 306 வீடுகளில் மின்சார வசதியை தெனான நேசனல் பெர்ஹாட் மீண்டும் விநியோகித்துள்ளது.
இதனிடையே சம்பவம் நிகழ்ந்த இடம் போலீஸ் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருப்பதோடு , குடியிருப்பாளர்கள் மற்றும் சிறப்பு பாஸ்களை கொண்டிருப்பவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்லமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.